சனி, 26 ஜூலை, 2025

கடன்மூலம் பெறப்படும் போலிக் கௌரவங்கள்

    

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம் சென்னை-28   

 

 நிலையற்ற உலகில் நிலையாக வாழப்போவதாக எண்ணிக்கொண்ட மனிதர்கள் பிற மக்கள் மத்தியில் போலிக் கௌரவங்களைக் காட்டிக்கொள்ள முனைகின்றார்கள். அதனால் அவர்கள் தம் இயல்பான வாழ்க்கை நிலையைவிட உயர்வாக இருப்பதாகக் காட்டிக்கொள்ள மிகுதியாகக் கடன்பெறுகின்றார்கள். வீட்டிற்கு அவசியத் தேவையற்ற பொருள்கள், வாகனங்கள் வாங்கிக் குவிப்பதன் மூலம் நாங்கள் சாதாரண ஆள் இல்லை என்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திக்கொள்கின்றார்கள்.

 

கடன் வாங்குவது அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது எப்போது வாங்க வேண்டும்? உணவுக்கோ கல்விக்கோ பணமில்லாதபோது கடன் வாங்கலாம். அதைத் திருப்பிச் செலுத்தும் எண்ணத்தோடு வாங்குவது மிக முக்கியமானது. திருப்பிச் செலுத்தும் எந்தத் திட்டமும் இல்லை; எந்தப் பொருளாதாரப் பின்னணியும் இல்லை எனும்போது அவர் கடன் வாங்குவது எங்ஙனம் கூடும்? அவசியத் தேவைக்காக அல்லாமல் பிறர் தம்மைச் சாதாரணமாகக் கருதிவிடக் கூடாது என்பதற்காகவும் போலிக் கௌரவத்தை நிலைநாட்டிக்கொள்வதற்காகவும் கடன் வாங்குவது தவிர்க்கப்பட வேண்டும். அதிலும் குறிப்பாக, வட்டிக்குக் கடன் வாங்குவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

 

வெளிப்புற ஆடம்பரத்தையும் போலியான வாழ்க்கை நிலைகளையும் கண்டு இன்றைய மக்கள் பலர் ஏமாறுகிறார்கள். வெளிப்படையாகப் பார்த்தால் மாப்பிள்ளைக்கு எழுபதாயிரம் சம்பளம்; காரில் பயணம்; சொந்த வீடு. உள்ளே நுழைந்து பார்த்தால், அவ்வளவும் கடன். வாங்கும் சம்பளத்தில் பாதிக்கு மேல் இஎம்ஐ கட்டியே தீர்ந்துவிடும். மீதியை வைத்துத்தான் குடும்பம் நடத்த வேண்டும். அல்லது மனைவியையும் வேலைக்கு அனுப்பி அதில் வரும் வருவாயில்தான் குடும்பம் நடத்த வேண்டும்.

 

வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல், கடனுக்கு வாங்கிய காரைத் திருப்பிக் கொடுக்கும் நிலையும், கடன் வாங்கிக் கட்டிய வீட்டை விற்கும் நிலையும் ஏற்பட்டுவிடுகிறது. கடன் என்றாலே வட்டியின்றி இல்லை. அப்படியிருக்கும்போது எவ்வளவுதான் செலுத்தியும் அந்த வட்டியைத்தான் செலுத்த முடிந்ததேயன்றி, வாங்கிய கடன் இன்னும் முடிந்தபாடில்லை. இந்த உண்மை நிலையை உணராத பெற்றோர், தம் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும்போது, வந்த நல்ல நல்ல (ஸாலிஹான) மணமகன்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு, எழுபதாயிரம் சம்பளம்; சொந்தக் கார்; சொந்த வீடு உள்ளவரைத் தேடிப் பிடித்துத் தேர்வுசெய்து மணமுடித்துவைக்கின்றார்கள். திருமணம் முடிந்த பிறகுதான், எல்லாமே போலிக் கௌரவங்கள் என்பது புரிகிறது.

 

மிகுந்த படபடப்போடும் பதற்றத்தோடும் இருப்பவரைப் பார்த்து, ‘கடன்பட்டார் நெஞ்சல்போல்’ எனும் முதுமொழியை உவமையாகச் சொல்வார்கள். அதாவது கடன்பட்டவர், கடன்கொடுத்தவரைக் கண்டால் அக்கடனை அடைக்க முடியாமல் எவ்வளவு படபடப்போடும் பதற்றத்தோடும் காணப்படுவாரோ அவ்வாறு காணப்படுகிறாரே என்று உவமை கூறுவார்கள். ஆனால் இன்று கடன் வாங்குவது மிகச் சாதாரணமாகிவிட்டது.  அதைத் திருப்பிச் செலுத்த வேண்டுமே என்ற பதற்றமோ படபடப்போ இல்லை. மாறாக, கடன்கொடுத்தவர்தாம் படபடப்போடும் பதற்றத்தோடும் காணப்படுகிறார். வாங்கிய கடனை இவர் திருப்பித் தருவாரோ, மாட்டாரோ என்று குழம்பிப்போகிறார். மீண்டும் மீண்டும் கேட்டு அலைகிறார். அல்லது ‘பிறகு தருகிறேன்’ ‘பிறகு தருகிறேன்’ என்று கடன் வாங்கியவர் அவ்வப்போது சொல்வதால் அலைக்கழிக்கப்படுகிறார்.

 

இன்றைய அவசர உலகில் பலர் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றிவிடுகின்றார்கள். அதற்கான தண்டனை குறித்தோ மறுமை விசாரணை குறித்தோ சிறிதளவும் அஞ்சுவதில்லை. பொதுவாகவே உறவினர்களிடமும் நண்பர்களிடமும்தான் கடன் வாங்குகின்றார்கள். ‘நம்முடைய நண்பர்தானே’, ‘நம்முடைய உறவினர்தானே’ என்ற நம்பிக்கையில் அவர்கள் கடன் கொடுக்கின்றார்கள். ஆனால் வாங்குவோர் அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவதில்லை. பல மாதங்களாகியும், பல ஆண்டுகளாகியும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றுவது மிகப்பெரிய பாவமாகும்.

 

சமுரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது “இன்ன குலத்தவரில் ஒருவர் இங்கே இருக்கின்றாரா?” எனக் கேட்டார்கள். அதற்கு ஒருவரும் பதில் கூறவில்லை. பின்பு “இன்ன குலத்தவரில் ஒருவர் இங்கே இருக்கின்றாரா?” என்று கேட்டார்கள்.

 

அவர்களுக்கு ஒருவரும் பதில் அளிக்கவில்லை. பின்னர் (மூன்றாம் முறையாக “இன்ன குலத்தவரில் ஒருவர் இந்த இடத்தில் இருக்கின்றாரா?” என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்து “நான் இருக்கிறேன் அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார். அவரிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “முதல் இரண்டு தடவை நீ எனக்குப் பதிலளிக்காத காரணம் என்ன” என்று கேட்டுவிட்டு, “நான் உங்களிடம் நன்மையைத் தவிர வேறெதையும் பேசக்கூடாது என்று கருதுகிறேன். (அவர்களுள் நீங்கள் குறிப்பிடுகின்ற) இன்னவர் மற்றொருவருக்குக் கொடுக்க வேண்டிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இறந்து விட்டதால் (சொர்க்கத்தில் நுழைய முடியாமல்) தடுக்கப்பட்டுவிட்டார்” என்று கூறினார்கள். சமுரா ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள்: அந்த மனிதருக்காக மற்றொரு மனிதர் அவரது கடனை நிறைவேற்றியதையும் அதனால் யாரும் தர வேண்டிய கடனைத் தரும்படி கேட்காததையும் நான் கண்டேன். (அபூதாவூத்: 3341/ 2900)

 

 

ஆக ஒரு முஃமின் சொர்க்கம் செல்லத் தடையாக இருப்பது பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தாததே ஆகும். எனவே நாம் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்துவதில் மிகுந்த அக்கறை காட்ட வேண்டும். இல்லையேல் ‘நாம் எவ்வளவுதான் நன்மைகள் செய்தபோதிலும்’ நாம் சொர்க்கம் செல்ல முடியாமல் போவதற்கு அதுவே காரணமாகிவிடும்.

 

இன்றைய மனிதர்கள் இளம் வயதிலேயே இறந்துவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். திடீர் திடீரென  நெஞ்சு வலி (ஹார்ட் அட்டாக்) காரணமாக மரணத்தைத் தழுவுகின்றார்கள். இதயக்கோளாறு, சிறுநீரகக் கோளாறு, கேன்சர் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. பின்னர் நாம் சிகிச்சையளித்துத் தேற்றிக் கொண்டுவந்துவிடலாமென நினைக்கின்ற தருணத்தில் திடீரென இறந்துபோய்விடுகின்றார்கள். நாம் ஒன்றும் செய்ய முடிவதில்லை. இத்தகைய  மரணம் யாருக்கு வரும், யாருக்கு வராது என்று வகைப்படுத்திச் சொல்வதற்கில்லை. எனவே நாம் யாரிடம் கடன் வாங்கினாலும் அதை ஒரு குறிப்பேட்டில் எழுதிவைத்துக்கொள்ள வேண்டும். நாம் வாழும் காலத்தில் அதை அடைக்க முடிந்தால், நாமே அடைத்துவிடலாம். இல்லையேல் நாம் இறந்த பிறகு நம்முடைய சந்ததிகளேனும் அந்தக் குறிப்பேட்டிலுள்ள விவரத்தைப் பார்த்து, நம் சார்பாக நம் கடனை அவர்கள் உரியவர்களிடம் திருப்பிச் செலுத்துவார்கள். அதனால் நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டுச் சொர்க்கம் செல்லலாம். ஆகவே பெற்ற கடனை உரிய முறையில் எழுதி வைத்துக்கொள்ளும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இது அல்லாஹ்வின் ஆணையும்கூட.

 

அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கைகொண்டோரே! நீங்கள் ஒரு குறித்த தவணையின் மீது (உங்களுக்குள்) கடன் கொடுத்துக் கொண்டால் அதை எழுதிவைத்துக்கொள்ளுங்கள். (2: 282)

கடன் வாங்குவதிலிருந்து நபியவர்கள் பாதுகாப்புத் தேடியுள்ளார்கள் என்றால் கடன் வாங்கக் கூடாது என்றுதானே அர்த்தம்? அதில் ஏன் அந்த அளவிற்குப் பேணுதலாக இருந்துள்ளார்கள் என்பதை நாம் பின்வரும் செய்தியின்மூலம் அறியலாம்.

 

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுகையில் துஆ செய்யும் போது, அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் மஃஸமி வல்மஃக்ரமி (இறைவா! பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்) என்று கூறுவார்கள்.  (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே!  தாங்கள் கடன் படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகப் பாதுகாப்புத் தேடுவதற்குக் காரணம் என்ன?'' என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், "மனிதன் கடன்படும் போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான்'' என்று பதிலளித்தார்கள். (புகாரீ: 2397)

 

பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பது ஒருவரின் உரிமையைப் பறித்துக்கொள்வதற்குச் சமமாகும். எனவேதான் நபியவர்கள் யாரேனும் ஒருவருக்கு ஜனாஸா தொழுகை நடத்த முற்பட்டாலும் அதற்குமுன் அவருக்குக் கடன் ஏதும் உள்ளதா என்று கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தாதவராக இருந்தால் அவருக்குத் தொழுகை நடத்தமாட்டார்கள். பிறரின் உரிமை குறித்து நபியவர்கள் எந்த அளவிற்கு எச்சரிக்கையாக இருந்துள்ளார்கள் என்பதற்குக் கீழ்க்காணும் செய்தி தக்க சான்றாகும்.

 

சலமா பின் அக்வஃ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அமர்ந்திருந்தபோது ஒரு ஜனாஸா (பிரேதம்) கொண்டுவரப்பட்டது.  நபித் தோழர்கள், “நீங்கள் இவருக்குத் தொழுகை நடத்துங்கள்!” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறினார்கள்.  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “இவர் கடனாளியா?” என்று கேட்டபோது நபித்தோழர்கள், “இல்லை” என்றனர்.  “ஏதேனும் (சொத்தை) இவர் விட்டுச் சென்றிருக்கிறாரா?” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டபோது, “இல்லை” என்றனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது “அல்லாஹ்வின் தூதரே! இவருக்குத் தொழுகை நடத்துங்கள்” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “இவர் கடனாளியா?” என்று கேட்டபோது “ஆம்” எனக் கூறப்பட்டது. “இவர் ஏதேனும் விட்டுச் சென்றிருக்கிறாரா?” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டபோது “மூன்று தங்கக் காசுகளை விட்டுச் சென்றிருக்கிறார்” என்றனர். அவருக்கும் தொழுகை நடத்தினார்கள்.

 

பிறகு மூன்றாவது ஜனாஸா கொண்டு வரப்பட்டது. “நீங்கள் தொழுகை நடத்துங்கள்” என்று நபித்தோழர்கள் கூறினர். “இவர் எதையேனும் விட்டுச் சென்றிருக்கிறாரா?” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டபோது “இல்லை” என்றனர். “இவர் கடனாளியா?” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டபோது, “மூன்று தங்கக் காசுகள் கடன் வைத்திருக்கிறார்” என்று நபித்தோழர்கள் கூறினர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்” என்றனர். அப்போது அபூகத்தாதா ரளியல்லாஹு அன்ஹு “இவரது கடனுக்கு நான் பொறுப்பு; அல்லாஹ்வின் தூதரே! இவருக்குத் தொழுகை நடத்துங்கள்!” என்று கூறியதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். (புகாரீ: 2289)

 

ஆக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எந்த அளவிற்குக் கடன் விஷயத்தில் கவனமாக இருந்துள்ளார்கள் என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். ஏனெனில் ஒருவரின் ஜனாஸா தொழுகையில் அல்லாஹும்மஃக்ஃபிர் லஹு வர்ஹம்ஹு (இறைவா! இவருடைய பாவத்தை மன்னித்து, இவருக்கு அருள்புரிவாயாக) என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். பிறரின் உரிமையைப் பறித்துக்கொண்டவருக்கு ஓர் இறைத்தூதர் எவ்வாறு அங்ஙனம் பிரார்த்தனை செய்ய முடியும்? எனவேதான் நபியவர்கள் அவரது ஜனாஸாவுக்குத் தொழுவிக்கவில்லை. பின்னர் அவரின் கடனுக்கு ஒருவர் பொறுப்பேற்றுக்கொண்ட பின், அவரது ஜனாஸாவுக்குத் தொழுவித்தார்கள்.

 

ஒருவர் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏன் வருகிறது? பிறரைப் பார்த்து அவர்களைப் போலவே நாமும் வாழ வேண்டும் என்ற ஆசையால்தான் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஒவ்வொருவரும் தத்தமது வருவாய்க்குள் வாழ்க்கை நடத்தக் கற்றுக்கொண்டால், தம்மைவிட மேலே உள்ளோரைப் பார்க்காமல் தம்மைவிடக் கீழே உள்ளோரைப் பார்த்து வாழப் பழகிக்கொண்டால் கடன் வாங்க வேண்டிய தேவை ஏற்படாது. கார் வாங்கவும் வீடு கட்டவும் கடன் வாங்கிவிட்டு, அதைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அல்லாடுவோர் பலர் உள்ளனர். அவர்கள் சற்றேனும் சிந்திக்க வேண்டும்.

 

நம்முள் சிலர் திருமணத்திற்காகக் கடன் வாங்குகின்றனர். பிறகு அதைத் திருப்பிச்செலுத்துவதற்குள் இன்னொரு பிள்ளைக்குத் திருமண வயது வந்துவிடுகிறது. அதனால் அந்தப் பிள்ளைக்காகவும் கடன் வாங்கித் தடபுடலாகத் திருமணம் செய்து வைக்கிறார் தந்தை. அதன்பின் அந்தக் கடன்களை அடைப்பதற்குள் அவரது ஆவி பிரிந்துவிடுகிறது. இத்தகைய சூழல் ஏற்படக் காரணம், நாம் பிறரைப் பார்த்து, அதைப் போலவே செய்ய எண்ணுகிறோம். ஒவ்வொருவரும் தத்தமது சூழ்நிலைக்கேற்பச் செயல்பட முற்பட்டால், போலிக் கௌரவத்தைக் கைவிடத் துணிந்துவிட்டால் திருமணம் உள்ளிட்ட எல்லாச் செயல்பாடுகளையும் எளிதாக எதிர்கொள்ளலாம்; கடனின்றி வாழலாம். அத்தகைய நல்வாய்ப்பை நாம் உருவாக்கிக்கொள்ள இறைவனிடம் இறைஞ்சுவோம்.

========================================











புதன், 23 ஜூலை, 2025

மிகுந்த மரியாதை ஒருவரை வழிகெடுத்துவிடும்

  

---------------------------------------------

ஒருவருக்கு மக்கள் கொடுக்கின்ற மிகுந்த மரியாதை அவரை வழிகெடுக்கவும் வாய்ப்புண்டு. அதனால்தான்  அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், தாம் வரும்போது மக்கள் தமக்காக எழுந்து நிற்பதை விரும்பவில்லை. “அறியாமைக் கால மக்களைப் போல் எழுந்து நிற்காதீர்கள்” என்று தடை விதித்தார்கள். 


மக்களோடு மக்களாக வாழ வேண்டியவர்கள், தமக்கென ஒரு வேடத்தைப் பூண்டுகொண்டு மற்றவர்களைவிடத் தம்மை மேலானவர்களாக எண்ணிக்கொள்கின்றார்கள். அவரை 'ஷைக்’காக ஏற்றுக்கொள்பவர்களைத் தம் சீடர்களாகப் பாவித்து, தாம் சொல்வதையெல்லாம் கேட்டு, அவற்றை அப்படியே பின்பற்றி நடக்கும் அறிவிலிகளாகக் கருதிக்கொள்கின்றார்கள். 


சீடர்கள் தம்முடைய ‘ஷைக்’ வரும்போது அவருக்காக எழுந்து நிற்பதும் அவரது கைகளை முத்தமிடுவதும் அவருக்கு மிகுந்த பெருமையை ஏற்படுத்திவிடுகின்றது. காலப்போக்கில் அந்தக் கண்ணியத்தைச் சற்று அதிகப்படுத்திக்கொள்ள, தம்மைக் குறிப்பிட்ட அந்தத் தரீக்காவிற்குக் கலீஃபாவாக ஆக்கிக்கொள்கிறார். அது இன்னும் மரியாதையை அதிகப்படுத்துகிறது. 


காலப்போக்கில் மக்கள் தம் ‘ஷைக்’ கின் காலில் விழுந்து வணங்கவும் தொடங்கிவிடுகின்றார்கள்.  அதுதான் உச்சநிலை. அத்தகைய நிலையை அடைவதையே பெரும்பாலோர் விரும்புகின்றார்கள். 

இறுதியில் சிலர் தம்மை மஹ்தி என்றும் மஸீஹ் என்றும் இறுதி நபி என்றும் கூறிக்கொள்ள முனைகின்றார்கள்.  இதுதான் அவர்களின் வழிகேடு ஆகும். மிகுந்த மரியாதையை எதிர்பார்த்தல் அவர்களுடைய ஈமானையே தின்றுவிடக் காரணமாகிறது என்பதே நிதர்சன உண்மையாகும். 


எனவே நாம் ஒவ்வொருவரும் மக்களோடு மக்களாக இணைந்து வாழ்வோம். பள்ளிவாசலில் இமாமாக இருப்போரின் ஈமானும் அவரைப் பின்பற்றித் தொழுவோரின் ஈமானும் ஒன்றுதான் என்பதை உணர்ந்து செயல்படுவோம். 


அன்புடன்  

நூ. அப்துல் ஹாதி பாகவி 

23 07 2025

------------------------

செவ்வாய், 22 ஜூலை, 2025

கவனக்குறைவு தவிர்ப்போம்!

 

    

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

நம்முள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொறுப்பில் இருக்கிறோம். நாம் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பைச் செவ்வனே செய்துவிட்டால் நம்மால் யாருக்கும் எந்தச் சிரமமும் இருக்காது. நம்முள் சிலர் தமது பொறுப்பைச் சீராக நிறைவேற்றாதபோது, அல்லது பொறுப்பில் கவனக்குறைவாக இருக்கும்போது அதனால் பிறருக்கு எவ்வளவு சிரமமும் இழப்பும் ஏற்படுகிறது என்பதை நாம் யோசிப்பதே இல்லை. அதை மிகச் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம். மேலும் அது மனித இயல்புதானே என்று வாதிடுகிறோம். அலட்சியத்தோடும் கவனக்குறைவோடும் செயல்படும் இன்றைய இளைஞர்களாலும் இளைஞிகளாலும் விலை மதிப்பற்ற எத்தனையோ உயிர்கள் பறிபோகின்றன. அல்லது அவர்களே தம் உயிர்களை இழக்கின்றார்கள்.

 

கவனக்குறைவோடும் அலட்சியத்தோடும் கட்டப்படும் கட்டடங்கள், மேம்பாலங்கள் திறந்துவைக்கப்பட்ட சில நாள்களிலேயே இடிந்து விழுகின்றன. அதனால் பற்பல உயிர்கள் பலியாகின்றன. வாகனங்களை உரிய முறையில் பராமரிக்காததால் விபத்துக்குள்ளாகி உயிரிழப்பை ஏற்படுத்துகின்றன. ஓட்டுநர் மட்டுமின்றி, அதில் பயணம் செய்வோரும், எதிர்வரும் வாகனங்களில் உள்ளோரும் மரணத்தைத் தழுவுகின்றனர். கடந்த ஜூலை 8ஆம் தேதி, இரயில்வே வாயில் காப்பாளரின் (கேட் கீப்பர்) கவனக்குறைவால் பள்ளி வேன்மீது இரயில் மோதி கடலூரில் கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் மாணவர்கள் மூவர் உயிரிழந்துள்ளனர்; பலர் காயமடைந்துள்ளனர். வாயில் காப்பாளர் உரிய நேரத்தில் இரயில் கடவுப்பாதையை மூடாததால், அந்த வேன் தண்டவாளத்தைக் கடந்தபோது வேகமாக வந்த தொடர்வண்டியால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ஆக ஒருவரின் கவனக்குறைவு பல உயிர்களின் இழப்புக்குக் காரணமாகிவிட்டது.

 

சாலையில் பயணிக்கின்ற இலகுரக வாகனங்கள், கனரக வாகனங்கள் மட்டுமின்றி, தொடரி, விமானங்கள் உள்ளிட்டவையும் விபத்துகளைச் சந்திக்கின்றன. தொடரியைப் பொருத்த வரை வெறுமனே ஓட்டுநரின் கவனக்குறைவு மட்டுமின்றி, சிக்னல் கொடுப்பவரின் அலட்சியமும் சேர்ந்துகொள்வதால்தான் விபத்து ஏற்படுகிறது.  விமானத்தைப் பொருத்த வரை அது ஒவ்வொரு தடவை புறப்படுவதற்கு முன்னும் ஏதாவது பழுது இருக்கிறதா என்று கவனிக்கப்படுகிறது. ஆனாலும் யாரோ ஒருவரின் அலட்சியத்தாலும் கவனக்குறைவாலும் அடிக்கடி விபத்து  ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது.

 

அண்மையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங்-787-8 எனும் விமானம் குஜராத்-அஹமதாபாத் விமான நிலையத்திலிருந்து இலண்டன் நோக்கிப் பறக்கத் தொடங்கிய இரண்டு நிமிடங்களிலேயே அங்குள்ள ஒரு விடுதியில் மோதித் தீப்பற்றி எரிந்துபோனது. அந்த விமானத்தில் பயணம் செய்த 241 பேரும், தரையில், விடுதியில் இருந்த 19 பேரும் என 260 பேர் இவ்விபத்தில் உயிரிழந்துள்ளனர். மிகுதியான பொருள்களை ஏற்றியதால்தான் அது மேலெழுந்து பறக்க முடியாமல் விடுதிக் கட்டடத்தில் மோதியது என்று காரணம் கூறுகின்றனர். அதிலுள்ள கருப்புப்பெட்டி (தகவல் பெட்டி) மூலம் செய்தி வெளிவந்தால்தான் உண்மை உலகுக்குத் தெரியும்.

 

வீடுகளில் அல்லது கடைகளில் எரிவாயு உருளைமூலம் சமைக்கின்றபோது மிகவும் அலட்சியமாகவும் கவனக்குறைவாகவும் இருப்பதால் அல்லது சமையல் அறைக்குள் கைப்பேசியைப் பயன்படுத்துவதால் விபத்து ஏற்படுகின்றது. சிலர் எரிவாயு கடந்துசெல்லும் குழாயைக் குறிப்பிட்ட காலத்திற்குள் மாற்றுவதில் அலட்சியமாக இருந்துவிடுகின்றனர். அதன் காரணமாகவும் எரிவாயு உருளை வெடித்து விபத்து ஏற்படுகிறது. இது போன்ற செய்தியை நாம் அவ்வப்போது படிக்க நேரிடுகிறது.

 

நாம் அடிக்கடி படிக்கக்கூடிய வேதனையான செய்தி என்னவெனில், சிவகாசி தீப்பெட்டித் தொழிற்சாலை வெடித்து 10 பேர் மரணம்; வெடிமருந்துத் தொழிற்சாலை வெடித்து 20 பேர் மரணம் என்பதுதான். மிக மிகக் கவனமாக இருக்க வேண்டிய இடங்கள் என்று தெரிந்தும் மிக அலட்சியமாகவும் கவனக்குறைவாகவும் செயல்படுவதால் இத்தகைய விபத்து நடைபெறுவது தொடர்கதையாக உள்ளது. கடந்த ஜூலை 1ஆம் தேதி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த மேடாக் மாவட்டம் பாசமயிலாரம் என்ற இடத்தில் தனியார் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் கலவை எந்திரம் திடீரென வெடித்துச் சிதறியதில் அதன் அருகே பணியில் இருந்த தொழிலாளர்கள் சுமார் 100 மீட்டர் உயரத்திற்குத் தூக்கி வீசப்பட்டனர். இதில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 35 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். சிவகாசி அருகே நாரணாபுரம் புதூரில் உள்ள மகேஸ்வரி பட்டாசு ஆலையில் கடந்த ஆண்டு (2024) மே 11ஆம் தேதி காலை 6:15 மணி அளவில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 அறைகள் இடிந்து தரைமட்டமாயின. அந்நேரத்தில் அங்கு யாரும் பணியில் இல்லாததால் யாருக்கும் காயமோ உயிர்ச்சேதமோ இல்லை. செங்கமலபட்டி சுதர்சன் பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். இது ஒரு தொடர்கதையாகவே தொடர்கிறது.

    

மேலும் அரசுத் துறை அதிகாரிகளின் அலட்சியத்தாலும் கவனக்குறைவாலும் ஒவ்வொரு நாளும் எத்தனையெத்தனை விபத்துகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. சரியான முறையில் ஆய்வு செய்யாமல்  பன்னடுக்குக் கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கிவிடுகின்றனர். அவற்றுள் சில கட்டடங்கள் கட்டும்போதே இடிந்துவிழுந்துவிடுகின்றன. கடந்த காலங்களில் நாம் அது போன்று சில விபத்துகளைக் கண்டிருக்கிறோம். அதனால் பற்பல மனித உயிர்கள் பறிபோய்விட்டன; பறிபோகின்றன. சாலைகளைச் சரியாகப் பராமரிக்க வேண்டிய அதிகாரிகளின் கவனக்குறைவாலும் மெத்தனப்போக்காலும் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் வாகனங்களில் பயணம் செய்வோர் தவறி விழுந்து எத்தனையோ விபத்துகள் அவ்வப்போது நடைபெறுகின்றன. 

 

பெரிய பெரிய கட்டட உதிரிப் பாகங்களைக் கிரேன் மூலம் தூக்கும் பணியை மேற்கொள்வோர் மிகுந்த கவனத்தோடும் அக்கறையோடும் செயல்பட வேண்டும். ஆனால் கிரேனை இயக்குபவர்களின் கவனக் குறைவால்  அதில் சங்கிலிகளை இணைக்கக்கூடியோரின் மெத்தனப்போக்கால் எத்தனையோ விபத்துகள் அவ்வப்போது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அண்மையில் சென்னை-இராமாவரம் பகுதி மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட விபத்து இதற்கொரு சான்றாகும். கடந்த ஜூன் 12ஆம் தேதி மெட்ரோ பணியின்போது 100 டன் எடைகொண்ட கான்கிரீட் தண்டவாளம் இரண்டு மேலிருந்து கீழே விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். இதுபோன்று ஆங்காங்கே நடைபெறுகின்ற எத்தனையோ விபத்துகள் செய்திகளில் வருவதில்லை.  

 

தற்காலத்தில் மிகுதியான விபத்துகள் செல்போன்களால் நிகழ்கின்றன. செல்போன் தொலைவில் உள்ளவரை எளிதில் தொடர்புகொண்டு செய்தியைப் பரிமாறிக்கொள்வதற்கு என்ற நிலை மாறி, எல்லாச் செயல்பாடுகளும் செல்போனில்தான் நடைபெறுகின்றன. செல்பேசியின்றி எந்தச் செயலும் இல்லை எனும் நிலைக்கு மக்கள் வந்துவிட்டனர். சாப்பாடு ஆர்டர் செய்யவும் செல்போன்தான்; ஆட்டோ தேவையென்றாலும் செல்போன்தான்.  இருப்பினும் சாலையைக் கடக்கும்போதும் இரயில்வே தண்டவாளங்களைக் கடக்கும்போதும் அதில் கவனம் செலுத்தாமல் பேசுவதிலேயே கவனத்தைக் குவிப்பதால், வாகனங்கள்மூலமும், தொடர்வண்டி மூலமும் விபத்துகள் ஏற்பட்டவண்ணமாகவே உள்ளன. அதனால் பற்பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

 

அதுபோலவே செல்போனில் மின்னூட்டம் (சார்ஜ்) ஏற்றும்போது பேசக்கூடாது என்று எத்தனை தடவை சொன்னாலும் கேட்பதில்லை. மின்னூட்டம் ஏற்றும்போதே பேசுவதால் அது வெடித்து விபத்தை ஏற்படுத்துகிறது. அதனால் ஆங்காங்கே உயிரிழப்பு ஏற்படுகிறது. நடந்து செல்லும்போது செல்போனில் பேசாவிட்டாலும், பாடல்களைக் கேட்டுக்கொண்டே செல்வதால், வாகனங்களின் எச்சரிக்கை ஒலியைக் கேட்க முடியாமல் இளைஞர்கள்-இளைஞிகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர்.

 

தாய்-தந்தையரின் கவனக்குறைவால் எத்தனையோ குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மாடிப் படிக்கட்டுகளில் ஏறும்போதும், இறங்கும்போதும் குழந்தைகளைத் தனியே விட்டுவிடும் பெற்றோரால் அக்குழந்தைகள் விபத்தில் சிக்கிக்கொள்கின்றன. மேலிருந்து உருண்டு கீழே விழுந்து தலையில் பலத்த அடிபட்டு இறந்துவிடுகின்றார்கள்.  தற்காலத்தில் பெரு நகரங்களில் ஆங்காங்கே உள்ள பேரங்காடிகளில் (மால்கள்) நகரும் படிக்கட்டுகள் உள்ளன.  அவற்றில் பயணம் செய்யும்போது, பிள்ளைகளைத் தனியே விட்டுவிட்ட பெற்றோர்களால் அக்குழந்தைகள் விபத்தில் சிக்கி மாண்டுபோவதை அவ்வப்போது நாம் செய்திகளில் படிக்கிறோம்.

 

எத்தனையோ சிறுவர்கள், மாணவர்கள், தம் கவனக்குறைவால் பெரிய ஏரிகளில், குளங்களில், கடலில் குளிக்கும்போது அவற்றினுள் மூழ்கித் தம் இன்னுயிரை இழக்கின்றனர். எச்சரிக்கை உணர்வின்றி விளையாட்டுத்தனமாக அவர்கள் தம் தோழர்களோடு ஆனந்தமாகக் குளிக்கக் கடலில் அல்லது ஏரியில் குதித்து விடுகின்றனர். ‘ஆழம் அறியாமல் காலை விடாதே’ என்று சொல்வார்கள். அந்த அடிப்படையில் அவர்கள் நீச்சலும் தெரியாமல் அவற்றின் ஆழமும் தெரியாமல் அலட்சியப்போக்கோடு குளிப்பதால் அலையில் சிக்குண்டு அல்லது சகதியில் மாட்டிக்கொண்டு இறந்துவிட நேரிடுகிறது.

 

அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி வேலை பார்த்த எத்தனையோ தொழிலாளர்கள் மூச்சுத் திணறி இறந்துள்ளனர். கழிவுநீர்த் தொட்டிகளில் உள்ள மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைடு போன்ற விஷவாயுக்கள், தொழிலாளர்களின் சுவாசத்தைப் பாதித்து உயிரிழப்பை ஏற்படுத்துகின்றன. பல்லாண்டுகளாகத் திறக்கப்படாமல் அடைபட்டிருக்கும் பாதாளச் சாக்கடைக்குள் உருவாகியுள்ள நச்சு வாயுக்கள் குறித்த அறிவின்றி, எந்தவித முன்னேற்பாடும் இன்றி, அதனுள் இறங்குவதால் அந்த நச்சு வாயுவைச் சுவாசிக்கிற தொழிலாளர்கள் மூச்சுத் திணறி இறக்க நேரிடுகிறது. கோவையில் ஒரு நகைப்பட்டறை கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கித் தொழிலாளர்கள் மூவர் ஜூன் 2019இல் இறந்துபோனார்கள். 

  

இவ்வாறு எத்தனையோ செயல்பாடுகள் மனிதர்களின் கவனக்குறைவால் அன்றாடம் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. அதனால் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகிக்கொண்டே இருக்கின்றன. ஆகவே நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் மிகுந்த கவனத்தோடும் கூர்மதியோடும் செய்வோம். நம்மையும் நம்மைச் சார்ந்தோரையும் காத்து, விபத்துகளைத் தவிர்த்து வாழ்வோம்.

======================











சனி, 21 ஜூன், 2025

பசுமைப் புரட்சி செய்வோம்!

 பசுமைப் புரட்சி செய்வோம்!     

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

ஆண்டுக்கு ஆண்டு வெப்பத்தின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட பல்வேறு பெருநகரங்களில் வெப்ப அளவு 100 டிகிரிக்கு மேல் உள்ளது. வரும் காலங்களில் இதைவிட அதிகரிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. அதைத் தணிப்பதற்கான வழிமுறையைச் சுற்றுச்சூழல் அறிஞர்கள் மக்களுக்குச் சொல்லிக்கொண்டேதான் இருக்கின்றார்கள். ஆனால் அதைப் பொதுமக்கள் இன்னும் ஆர்வத்தோடு செயல்படுத்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதுதான் மரம் வளர்த்தல் ஆகும். இருப்பினும் சொந்த வீடு உள்ளவர்கள் மட்டுமே மரம் வளர்க்க முடியும். மற்றவர்களுக்கு அத்தகைய வாய்ப்பு இல்லை. எனவே அரசுதான் மிகுதியான மரங்களை மக்கள் நடமாடும் இடங்களிலும் ஏனைய இடங்களிலும் வளர்க்க முனைப்போடு செயல்பட வேண்டும். ஆனால் இன்று நகர விரிவாக்கம், சாலை விரிவாக்கம் என்ற பெயரில் பல்வேறு மரங்கள் மிக எளிதாக அகற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றனவே தவிர மரங்கள் அவ்வளவாக நடப்படவில்லை என்றே சொல்லலாம்.

 

சில இடங்களில் மட்டும் அகற்றப்படும் அம்மரங்கள் வேறு இடங்களில் நடப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன.  மற்ற இடங்களில் அவ்வாறு முனைப்புக் காட்டப்படுவதில்லை. மரங்கள் வளர்ப்பதால் பற்பல நன்மைகள் உள்ளன. சுற்றுச்சூழல் சார்ந்த நன்மைகள், சமூகம் சார்ந்த நன்மைகள், ஆக்கிரமிப்பில்லா வாழ்க்கைமுறை எனப் பற்பல நன்மைகள் உள்ளன.

 

சுற்றுச்சூழல் நன்மைகள்: மரங்கள் உயிரினங்களுக்குத் தேவைப்படும் உயிர்வளியை (ஆக்சிஜன்) வழங்குகின்றன. கார்பன் டை ஆக்ஸைடு, சல்பர் டயாக்ஸைடு போன்ற வாயுக்களை உறிஞ்சிக்கொள்வதோடு தூசுக்களையும் நீக்கித் தூய்மையான காற்றை வழங்குகின்றன. வெப்ப நிலையைச் சமநிலைப்படுத்தும் பணியில் மரங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மழைநீரைக் குடிநீராக மாற்றும் நிலநீரின் அளவை அவை உயர்த்துகின்றன. வேர்கள் மண்ணை உறுதியாகப் பிடித்துக்கொள்வதால் மண் அரிப்பு ஏற்பட்டு, நிலச்சரிவு ஏற்படுவது தடுக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவுக்குக் காரணம், மலைப்பகுதியில் இருந்த மரங்களைப் பெருமளவில் வெட்டிவிட்டு, கட்டடங்கள் கட்டப்பட்டதே ஆகும் என்று சூழலியல் அறிஞர்கள் கூறுகின்றார்கள்.

 

சமூக நன்மைகள்: மரங்கள் இயற்கை அழகை அதிகரிக்கின்றன; மைதானங்கள், வீதிகள், வீடுகள் எல்லாம் அழகாகத் தோற்றமளிக்கின்றன. நிழலினால் வெப்பம் குறையும்; இதனால் திறந்த இடங்களில்கூட வசதியாக இருக்க முடியும். இயற்கைச் சூழலில் மரங்களைச் சுற்றியிருப்பது மனஅழுத்தத்தைக் குறைத்து மனநலத்தை மேம்படுத்துகிறது. பறவைகள், விலங்குகள், பூச்சிகள் மற்றும் பிற உயிரினங்களுக்கு மரங்கள் வாழிடமாக விளங்குகின்றன. மரம் வளர்ப்பு, பழ மர விவசாயம், மர அடிப்படையிலான தொழில்கள் போன்றவை வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றன. பழ மரங்கள், மர உலோகம், மூலிகை மரங்கள் போன்றவை வருமானத்தை அதிகரிக்க உதவுகின்றன. மரம் கட்டடப் பொருட்களாகவும் பயன்படுவதால் பொருளாதார நன்மைகளும் இதில் உள்ளன. 

 

கலாமின் கனவை நிறைவேற்றியவர்: திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் எண்ணற்ற தனி மனிதர்கள், தன்னார்வ அமைப்புகள், பள்ளிகள், கல்லூரிகளோடு இணைந்து மரம் நடும் பணிகளில் ஈடுபட்டு வந்தார். தமிழ்நாட்டில் இவர் இப்படி வளர்த்த மரங்களின் எண்ணிக்கை 30 இலட்சம் இருக்கும். ‘கிரீன் கலாம்’ என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் தமிழகமெங்கும் மரம் வளர்ப்பை முன்னெடுத்து வந்தார். மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமோடு மிகுந்த நட்போடு இருந்தவர். ஒரு தடவை அவரைச் சந்தித்தபோது “ஒரு கோடி மரம் நடுங்கள் விவேக்” என்று அவர் கூறியதை மதித்து, அவரது அறிவுரையை ஏற்று அதன்படி செயல்பட்டவர்தாம் நடிகர் விவேக். கலாமின் கனவை நிறைவேற்றும் வகையில் தமிழகம் முழுவதும் ஒரு கோடி மரங்கள் வளர்க்க வேண்டும் என்ற வேட்கையோடு தொடர்ந்து இயங்கி வந்தார்.

 

அதேபோன்று உலக வன நாள், சுற்றுச்சூழல் நாள் என எந்தச் சிறப்பு நாள் வந்தாலும் அன்று மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்தும் விதமாக ஏதாவது ஒன்றைச் செய்துவந்தார். ``நாட்டில் தண்ணீர் வேண்டுமென்றால் மழை வேண்டும்; மழை வேண்டுமென்றால் மரங்கள் இருக்க வேண்டும். நாட்டில், விவசாயம் செய்வதற்கான மண் வளம், மனிதர்களுக்குத் தேவையான தூய்மையான உயிர்வளி ஆகியவை குறைந்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் என்னிடம் கூறினார்” என்று நடிகர் விவேக் 2011இல் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதன்முதலில் தொடங்கியபோது பேட்டியளித்தார்.

 

சென்னையில் 10,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தைத் தொடங்கினார். கோவையில் ஒரு இலட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து, சேலத்தில் 25,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தைத் தொடங்கினார். பின்னர் பல்வேறு முக்கிய நகரங்களிலும் அப்பணியைத் தொடர்ந்தார். 

ஒவ்வொருவரும் வீட்டிலும் 2 மரக்கன்றுகளை நடவேண்டும். இந்த விஷயம் மக்கள் மனதில் பதிய வேண்டும். இவ்வாறு மரக்கன்றுகள் நட்டால் காற்றிலுள்ள நச்சுத்தன்மை குறையும். எனவே, தமிழகத்திலிருந்து மரங்களின் பசுமைப் புரட்சி தொடங்க வேண்டும்” என்று பேசிவந்தார். ஆனால் அவர் நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார். அப்பணிக்கு மூலவேராக இருந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமும் நம்மைவிட்டு மறைந்துவிட்டார். இருப்பினும் அவர்கள் கூறிய நல்லுரை நம்மைத் தூண்டிக்கொண்டே இருக்கிறது.

 

சாலையோர மரங்கள்: கடந்த காலங்களில் சாலையின் இருபுறங்களிலும் புளிய மரங்களும் வேப்ப மரங்களும் இருந்தன. நடந்து செல்வோர் அந்த மரங்களின் நிழலிலேயே செல்வர். தாகமாக உள்ளோர் அந்தப் புளிய மரங்களின் காய்களை, செங்காய்களை, பழங்களைப் பறித்து உண்பர். ஆனால் தற்காலச் சாலைகளின் இருபுறங்களும் வெறுச்சோடிக் கிடக்கின்றன. ஒருக்கால் மரங்கள் இருந்தாலும் பயனற்ற மரங்கள் மட்டுமே உள்ளன. அவற்றிலிருந்து காய்களையோ கனிகளையோ பறித்து உண்ண இயலாது. எனவே மரங்கள் நடவேண்டும். ஆனால் மக்கள் பயனுறும் மரங்களை நடவேண்டும்.

 

முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ, ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்: புகாரீ: 2320)

 

பயனுள்ள மரம் வளர்த்தல்: முஸ்லிம் ஒருவர் பயனுள்ள ஒரு மரத்தை நட்டு, அதைப் பராமரித்து வளர்த்து வந்தார். அதில் காய்கள் காய்த்து, கனியத் தொடங்கின. அதிலிருந்து பறவைகள், கால்நடைகள் உண்டன. கீழே விழுந்தவற்றைச் சிறுவர் சிறுமியர் எடுத்து உண்டனர். அக்கம் பக்கம் வசிப்போர் அதிலிருந்து பறித்துச் சென்றனர். இவை அனைத்தும் அவருக்கு நன்மையாக மாறிவிடும். அதிலிருந்து அவருக்குத் தெரியாமல் யாரும் பறித்துச் சென்றால் அது குறித்து அவர் கவலைப்படத் தேவையில்லை. அவை அனைத்தும் அவருக்கு நன்மைகளாகக் கிடைத்துவிடும். இதுதான் இஸ்லாமியப் பார்வை. ஆக மற்றவர்கள் மரங்களை நட வேண்டும் என்று கூறுகின்றார்கள். ஆனால் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பயனுள்ள மரங்களை நடவேண்டுமெனக் கூறுகின்றார்கள்.

 

அன்னையின் பெயரில் ஒரு மரம்: உலகச் சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு, அதன் தொடர்ச்சியாக, நிலமெங்கும் பசுமையை ஏற்படுத்துமுகமாக ‘அன்னையின் பெயரில் ஒரு மரம்’ எனும் பிரச்சார இயக்கத்தைத் தமிழக ஆளுநர் ஆர்.என். இரவி முன்னெடுத்துள்ளார். அப்பிரச்சார இயக்கத்தைத் தொடங்கிவைத்து 27 மரங்களை நட்டுள்ளார். இது வரவேற்கத்தக்க ஒரு முயற்சி என்றே நாம் கூறலாம். அதாவது ஒவ்வொருவருக்கும் அன்னை உண்டு. அந்த அன்னையின் மீதுள்ள அன்பின் அடையாளமாக ஒவ்வொருவரும் ஒரு மரம் நட்டால் தமிழ்நாடு பசுமை நாடாக மாறிவிடும் அல்லவா? நாம் ஏன் அதைச் செய்ய முயலக் கூடாது?

 

நிரந்தர நன்மை: ஒரு முஸ்லிம் தம் பெற்றோர் இறந்துவிட்டால், அவர்களுக்கு நன்மையைச் சேர்த்துவைக்க வேண்டும் என்று எண்ணுவார். அவர் தம் பெற்றோருக்காக அன்னதானம் செய்வார்; ஆடை தானம் செய்வார்; தர்மம் செய்வார். மிக அரிதாகச் சிலர் தம் பெற்றோருக்காக ஒரு கிணற்றைத் தோண்டி, அதன் நீரை எல்லோரும் எடுத்துப் பயன்படுத்த பொதுஅனுமதி வழங்கிடுவர். அதனால் அதிலிருந்து பயன்பெறக்கூடியோரின் நன்மைகள் அவர்களின் பெற்றோருக்குப் போய்ச் சேரும். இந்த வரிசையில் ஒருவர் தம் அன்னைக்காக ஒரு மாமரத்தையோ அதுபோன்ற பயனுள்ள கனிகளைத் தரும் வேறு மரத்தையோ நட்டு, அது பெரிதாக வளரும் வரை பராமரித்து, அதன்பின் அதன் பயனைப் பொதுமக்கள் அனுபவித்துக்கொள்ள பொதுஅனுமதி வழங்கிவிட்டால், அதிலிருந்து யாரெல்லாம் பயன்பெறுகின்றார்களோ அதன் நன்மைகள் யாவும் அவருடைய அன்னைக்கு நன்மையாகச் சென்றடையும். இது அவர் தம் தாய்க்குச் செய்யும் ஒரு நிரந்தர நன்மையாகும்.

 

போத்து நடவு முறை: ‘மரம் நடுவிழா என்று சொல்லிவிட்டுச் செடியை நடுகின்றார்களே’ என்று கேலி செய்து சிலர் சிரிப்பதுண்டு. செடியை நட்டால் அது பெரிய மரமாகும்; அது எதிர்காலத்தில் ஆகும் நிலையை முன்னரே சொல்வதுதானே உலக வழக்கு? இன்றைய செயற்கை நுண்ணறிவுக் காலத்தில் அனைத்தையுமே துரிதமாகப் பெற வேண்டும் என்று துடிக்கும் இளைஞர் இளைஞிகளே அதிகம். எனவே அவர்களின் எண்ண ஓட்டத்திற்கேற்பவே மரம் நடுதலில் ஒரு புதிய முறையும் பரவலாக்கப்பட்டுள்ளது. செடிகளை நடுவதற்குப் பதிலாக நல்ல வாட்டமான மரக்கிளைகளை ஏழு அடி உயரத்திற்குக் குறையாமல் வெட்டி பச்சை காய்ந்து விடாமல் பாதுகாப்பாக நட்டுவைத்தால் அது மிக விரைவாகத் துளிர்த்து, வளர்ந்து காய் காய்க்கத் தொடங்கிவிடும். மிக விரைவிலேயே அதன் பயன்களை நாம் அனுபவிக்கலாம். இவ்வாறு செய்வதால் மிகக் குறுகிய காலத்திலேயே மிகப்பெரும் சோலையை உண்டுபண்ணிவிடலாம். இந்த எளிய முறைக்கு ‘போத்து நடவு முறை’ என்று பெயர். இம்முறை குறிப்பிட்ட சில வகை மரங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

 

நிழலின் அருமை: பொதுவாக மரம் வளர்த்தலின் பயன் அதன் காய், கனிகள் என்பதைத் தாண்டி, அதன் நிழல் என்பதும் மிக முக்கியமானதாகும். ‘நிழலின் அருமை ª வயிலில் தெரியும்’ என்பார்கள். உச்சி வெயிலில் நடந்து வருகின்ற எத்தனையோ பேர் மரநிழலைக் கண்டதும் அங்குச் சற்றுநேரம் நின்று ஓய்வெடுத்துச் செல்வது இயல்பு. அவ்வாறு ஓய்வெடுக்கும் சிலர் அங்கு மரம் வைத்தவரை மனதார வாழ்த்துவார்கள். அந்த வாழ்த்தைப் பெறுவதற்காகவேனும் நாம் மரங்களை ஆங்காங்கே வளர்க்க வேண்டும். மேலும் நிழல் தரும் மரங்களுக்குக் கீழே நாம் ஒருபோதும் அசுத்தம் செய்துவிடக்கூடாது. ஏனெனில் அது மக்கள் ஓய்வெடுக்கும் இடமாகும். இது குறித்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “நீர்த் துறைகள், நடைபாதைகள், நிழல் (தரும் மரங்கள்-இடங்கள்) ஆகிய மூவிடங்களில் (மலஜலம் கழிப்பதால் மக்களின்) சாபத்திற்கு ஆளாகாமல் நீங்கள் உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். (நூல்: அபூதாவூத்: 24)

 

ஆக மரங்கள் வளர்ப்பது ஒரு நிலையான அறச்செயல் (ஸதக்கத்துன் ஜாரியா) என்பதை உணர்வோம். அதன்மூலம் மக்களின் அன்பையும் வாழ்த்தையும் (துஆ) பெறுவோம். நாம் ஒவ்வொருவரும் செய்யும் பசுமைப் புரட்சியே புவிவெப்பமயமாதலைத் தடுக்கும் எதிர்காலக் கேடயம் என்பதை மக்களுக்கு உணர்த்துவோம்.

===============